இவ்வாண்டின் சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் 37 வளர்ச்சி குன்றிய நாடுகள் கலந்து கொண்டன.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் நவம்பர் 7ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், முதலாவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி முதல், வளர்ச்சி குன்றிய நாடுகள் பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்கு சீனா வசதி அளித்து வருகிறது.
கடந்த 7 ஆண்டுகளில், வளர்ச்சி குன்றிய நாடுகளின் பொருட்கள் இப்பொருட்காட்சியின் மூலம் சீன சந்தையில் அதிகமாக நுழைந்துள்ளன. தொடர்புடைய நாடுகளின் தொழில்களின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கையின் மேம்பாட்டை இது விரைவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இவ்வாண்டின் டிசம்பர் முதல் நாள் தொடங்கி, வரி வசூலிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வளர்ச்சி குன்றிய நாடுகளின் அனைத்து பொருட்களுக்கும் வரி இல்லாத சலுகையை சீனா வழங்கும்.
உலகின் தென் பகுதியின் நாடுகளுடன் சீனா ஒத்துழைப்பை வலுப்படுத்தி, “உலகின் தென் பகுதியின்” நாடுகளின் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியை ஆதரித்து, உலகின் நவீனமயமாக்கத்தைக் கூட்டாக நனவாக்கும் என்றும் தெரிவித்தார்.