சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று தொடங்கினார். நேற்று கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, இன்று குமாரசாமி ராஜா நகரில் ₹77.12 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
அதன்பின், விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், விருதுநகர் மாவட்டத்திற்கு பல நலத்திட்டங்களையும் அறிவித்தார்.
அதில், முக்கிய நலத்திட்டமாக அவர் அறிவித்து என்னவென்றால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் ரூ.41 கோடி செலவில் மேம்படுத்தப்படும். காளிங்கபேரி, வெம்பக்கோட்டை அணைகள் மேம்படுத்தப்படும். அருப்புக்கோட்டையில் ரூ.350 கோடியில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படும்.
சிவகாசியில் ரூ.15 கோடி செலவில் நவீன கூட்டரங்கம் அமைக்கப்படும். விருதுநகரில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும். பட்டாசுத் தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.71 கோடி ரூபாய் செலவில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் விருதுநகர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2.44 கோடி செலவில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் அமைக்கப்படும்.
உழவர் நலத்துறை சார்பில் 200 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் நலத்திட்ட உதவிகள். தோட்டக்கலைத் துறை சார்பில் 150 பயனாளிகளுக்கு உதவிகள். கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை சார்பில் நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு உதவிகள் என மொத்தம் 417 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 57,556 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.