நெதர்லாந்தின் மிகப் பெரும் லித்தோகிராஃபி இயந்திரத்தின் உற்பத்தி நிறுவனமான ஏ.எஸ்.எம்.எல் நிறுவனம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக எத்தகைய கொள்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை நெதர்லாந்து அரசு சொந்தமாகவே தீர்மானிக்க விரும்புவதாக நெதர்லாந்தின் தலைமை அமைச்சர் டிக் ஸ்கூஃப் அண்மையில் அமெரிக்காவின் புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.
சீனாவுடன் சீரான வர்த்தக உறவை நெதர்லாந்து நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து சீனாவுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவிருப்பதாகவும் கூறினார்.
2024ஆம்ஆண்டின் மூன்றாவது காலாண்டின் தரவின்படி, சீனச் சந்தையில் ஏ.எஸ்.எம்.எல் நிறுவனத்தின் விற்பனைத் தொகை, அதன் மொத்த விற்பனை தொகையில் பாதியளவை வகித்துள்ளது. உலகில் முன்னணி லித்தோகிராஃபி இயந்திரங்களை உற்பத்தி செய்யும் ஒரே ஒரு நிறுவனம் ஏ.எஸ்.எம்.எல் ஆகும்.
இதற்கு முன்பு, அமெரிக்க அரசு, நாட்டின் பாதுகாப்பு என்பதைச் சாக்குப்போக்காகச் சொல்லி நெதர்லாந்து அரசின் மீது நிர்ப்பந்தத்தைத் திணித்து சீனாவுக்கான ஏ.எஸ்.எம்.எல் நிறுவனத்தின் ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்ததாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.