சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பாகிஸ்தான் துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் டார், இந்தோனேசிய தேசியப் பொருளாதார ஆணையத்தின் தலைவர் ருஹுட், அமெரிக்காவின் ஆசிய சமூகத்தின் இயக்குநர் கியுங் ஹுவா காங் அம்மையார் ஆகியோருடன் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் முறையே சந்திப்பு நடத்தினார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் டாருடன் பேசிய போது, பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளை களைந்து, நீடித்த மற்றும் விரிவான போர் நிறுத்த ஒப்பந்தங்களை மேற்கொண்டு அடிப்படைத் தீர்வுகளைத் தேடுவதை சீனா வரவேற்கிறது என்று வாங் யி தெரிவித்தார்.
இரு தரப்பினரின் அடிப்படை மற்றும் நீண்டகால நலன்களுக்கும், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும், சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்புக்கும் இது உகந்தது என்று கூறினார்.
பாரம்பரிய நட்பை வலுப்படுத்துதல், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ளுதல் ஆகியவற்றில் பாகிஸ்தானுடன் சீனா நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகிறது.
மேலும் பாகிஸ்தானின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும், அதன் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவதிலும் சீனா எப்போதும் போல, பாகிஸ்தானை உறுதியாக ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்தவும் தொழில், விவசாயம், எரிசக்தி மற்றும் கனிமங்கள், மனிதவள மேம்பாடு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் கைகோர்க்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.