சீன தலைமை அமைச்சர் லீச்சியாங் மே 27ம் நாள் மாலை கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற ஆசியான்-சீனா-வளைகுடா ஒத்துழைப்பு ஆணையம் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். வாய்ப்புகளை உருவாக்கி, செழுமையைக் கூட்டாக அனுபவிப்பது என்ற தலைப்பிலான இவ்வுச்சிமாநாட்டில், இந்த 3 தரப்புகள் மற்றும் கண்காணிப்பு நாடுகளின் தலைவர்கள் முதலியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆசியான்-சீனா-வளைகுடா ஒத்துழைப்பு ஆணையம் கூட்டறிக்கை இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
லீச்சியாங் உரைநிகழ்த்துகையில், சீனா, ஆசியான், வளைகுடா ஒத்துழைப்பு ஆணையம் ஆகியவற்றின் நட்புறவு, வாழையடி வாழையாக நிலவி வருகிறது. மூன்று தரப்புகள், மேலும் நெருங்கிய தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு மூலம், தங்களது செழுமைக்கும், உலகின் அமைதி வளர்ச்சிக்கும் பங்காற்றும். கூட்டாளி உறவை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை செயல்பாட்டுத் திட்டத்தை வகுத்து, அடிப்படை வசதிகள், எரியாற்றல், வேளாண்மை, செயற்கை நுண்ணறிவு, எண்ணியல் பொருளாதாரம், தூய்மை மற்றும் கரி குறைந்த துறைகளில் ஒத்துழைப்புகளை மூன்று தரப்புகள் விரிவாக்க வேண்டும். மேலும், பலதரப்பு விவகாரங்களில் ஒருங்கிணைப்பை அதிகரித்து, உலக மேலாண்மை மேலும் நியாயமான திசை நோக்கி செல்வதை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
