தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்கள் நலனுக்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இருப்பினும் ஒரு மாத கால விடுமுறையை மாணவர்கள் கொண்டாடிய நிலையில் இன்று (ஜூன் 2) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கரும்பலகைகளுக்கு வர்ணம் பூசுதல், பள்ளி வளாகத்தை தூய்மை படுத்துதல், பராமரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதற்கேற்ப பள்ளிகள் முன்கூட்டியே சுத்தம் செய்யப்பட்டு, முதல் நாளான இன்று மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் தயாராகிவிட்டனர்.
மேலும் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை மற்றும் பிற கல்வி உபகரணம் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி உத்தரவிடுள்ளது. அத்துடன் இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பேருந்துகளில் செல்ல மாணவர்கள் புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரையில், பழைய பஸ் பாஸை பயன்படுத்தி கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து பயண அட்டையை இணையதளம் மூலம் பதிவிறக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய 2025 – 26ம் கல்வியாண்டுக்கான நாட்காட்டி விரைவில் வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.