தேர்தல் பத்திரம் முறை ரத்து குறித்து ராமதாஸ் சொன்ன கருத்து…!!

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகச்சரியானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து கொள்ளாமல் இருக்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது, அது குறித்த விவரங்களை கமுக்கமாக வைத்திருக்க வசதியாக வருமானவரி சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும். அதை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன். இதன் தொடர்ச்சியாக தேர்தல்களில் பண பலம் பயன்படுத்தப்படுவதையும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author