ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கோயிலின் நுழைவாயில் பெண்கள் நெய் தீபங்கள் ஏற்றியும், தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். சில பக்தர்கள் குழந்தையைக் கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தி வந்தும் அம்மனை பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்குத் தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், எலுமிச்சம் பழம், உப்பு ஆகியவற்றை காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பெண்கள், விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், பச்சை மஞ்சளை அம்மியில் அரைக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. 500 கிலோ பச்சை மஞ்சளை 67 அம்மிகளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் அரைத்துக் கொடுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் வண்டியூர் மாரியம்மன் கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மன் ஆடிப்பூர சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.