தமிழகத்தின் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ஒவ்வொரு கல்வியாண்டிலும் மன்றச் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்தே, 2025-26-ம் கல்வியாண்டுக்கான இலக்கிய மன்றம் மற்றும் வினாடி வினா மன்றப் போட்டிகள் ஜூலை 21 முதல் 31-ம் தேதி வரை பள்ளி அளவில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இப்போட்டிகளில், ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு போட்டியாவது கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலக்கிய மன்றப் போட்டிகள் கட்டுரை எழுதுதல், கதை கூறுதல், உரையாற்றுதல், கவிதை எழுதுதல் போன்ற பிரிவுகளில் நடைபெறும். இதன்மூலம் மாணவர்களின் மொழிப் பாங்கு மற்றும் சிந்தனைக் திறன் வெளிப்பட வழி அமைக்கப்படுகிறது.
வினாடி வினா போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் 2 பேர் இருப்பது கட்டாயமாகும். ஒவ்வொரு சுற்றுக்கும் 10 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படவேண்டும். எனவே, மொத்தமாக 30 மதிப்பெண்களுக்கு போட்டி நடத்தி, அதன்படி வெற்றியாளர்கள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.