மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத், தற்போதைய நிலவரப்படி எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. எந்த வெளிப்படையான எதிரியும் இல்லை. ஆனாலும், அந்த நாடு வேகமாக ஆயுதங்களை வாங்குவதும், உற்பத்தி செய்வதிலும் ஈடுபடுவது சர்வதேச அளவில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.
இதற்குக் காரணமாக, சீனாவுடன் இணைந்து அமைக்கப்படும் வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலை தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. விரைவில் அது திறக்கப்படும் என குவைத்தின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா மஷால் அல்-சபா தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல், சீன தூதரகம் நடத்திய PLA ஆண்டு விழா நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. 2019ம் ஆண்டு முதல் இரு நாடுகளும் இணைந்து நடத்தும் பாதுகாப்பு பயிற்சிகள் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியடைந்து வருவதாகவும் அவர் கூறினார். தொழிற்சாலை தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியிடப்படாதபோதிலும், அதில் இலகுரக மற்றும் நடுத்தர தூர வெடிமருந்துகள் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்கா-சீனா இடையே சமநிலை தேடும் குவைத்!
குவைத், அமெரிக்காவின் நெருக்கமான இராணுவ பங்காளியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 1991-ம் ஆண்டு வளைகுடா போரில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, ஈராக் படையிடமிருந்து குவைத்தை மீட்டது. தற்போது, குவைத்தில் 13,500 அமெரிக்க வீரர்கள் மற்றும் 2,200 க்கும் மேற்பட்ட MRAP பாதுகாப்பு வாகனங்கள் இருக்கும் நிலையில், சீனாவுடனான ஒத்துழைப்பும் தொடர்கிறது.
1995ம் ஆண்டு, சீனாவுடன் இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் வளைகுடா நாடாக குவைத் திகழ்கிறது. அதன்பின் சீனா 155 மிமீ பீரங்கிகளை வழங்கியுள்ளது. மேலும் PLA கடற்படை துருப்புக்கள் மூன்று முறை குவைத்துக்கு விஜயம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
10வது பெரிய ஆயுத இறக்குமதி நாடு – 466% அதிகரிப்பு
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமான SIPRI தெரிவித்த தகவலின்படி, 2020–2024 காலகட்டத்தில், குவைத் உலகின் 10வது பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருந்தது.
அதில் மட்டும் அல்லாமல், 466% அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில், அமெரிக்காவே 63% ஆயுதங்களை வழங்கியது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, குவைத்தின் பாதுகாப்புத் தேவைகளை நிபந்தனையின்றி பூர்த்தி செய்ய சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இருப்பினும், அமெரிக்கா-சீனா இருதரப்பு சமநிலையைத் தேடும் குவைத் தனது பாதுகாப்பு, அரசியல் மற்றும் இராணுவ அடிப்படைகளை பலப்படுத்த விரிவாக ஆயுத முதலீடுகளை மேற்கொண்டு வருவதை வெளிக்காட்டுகிறது.