அமெரிக்கா – ரஷ்யா உச்சி மாநாட்டை முன்னிட்டு உலக கவனம் அலாஸ்காவுக்கு திரும்பியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அலாஸ்காவில் உள்ள எல்மெண்டோர்ஃப்–ரிச்சர்ட்சன் தளத்தில் நடைபெறவுள்ள சந்திப்பிற்கு முன், “ரஷ்ய அதிபர் புடின் இப்போது சமாதானத்தை நோக்கிச் செல்லத் தயாராக இருக்கிறார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு உலகம் முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வர இந்தியா மீதான வரி விதிப்பு முக்கிய காரணம் என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி புடின் சமாதானம் செய்வார், ஜெலென்ஸ்கியும் சமாதானம் செய்வார் என்று நான் நினைக்கிறேன். வாரத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்காகத்தான் நான் இந்த முயற்சியை செய்கிறேன்” என அவர் வலியுறுத்தினார். அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவரும் ஊக்கமாக ரஷ்யாவுக்கு அரிய கனிமங்கள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “சந்திப்பில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்” என டிரம்ப் பதிலளித்தார்.
இச்சந்திப்பு புடினுடன் மட்டுமல்லாமல், தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் நடக்கவிருப்பதாகவும், அதுவே மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார். “முதல் நாள் புடினுடன் சந்திப்போம். ஆனால் இரண்டாவது சந்திப்புதான் உண்மையில் முக்கியமானது. ஜெலென்ஸ்கியும் புடினும் ஒரே மேடையில் சந்திக்கும் தருணம் வரலாம். அதில் சில ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்கக்கூடும். அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போக முடிந்தால், அது மிகப்பெரிய வெற்றி” என டிரம்ப் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய ரஷ்யா–உக்ரைன் போரை “பைடனின் போர்” என்று குற்றம் சாட்டிய டிரம்ப், “நான் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் ஒருபோதும் ஏற்பட்டிருக்காது. இப்போது மில்லியன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். நான் இங்கே இருப்பதற்குக் காரணம் கொலையை நிறுத்த முடியுமா என்று பார்க்கவே” என்றார். ரஷ்யா வணிக பாதைக்கு மாறினால், இரு நாடுகளுக்கும் இடையில் சாதாரண வர்த்தகம் சாத்தியமாகும் என்றும், “புடினுடன் சந்திக்கும் முதல் இரண்டு நிமிடங்களிலேயே ஒரு ஒப்பந்தம் சாத்தியமா இல்லையா என அறிந்து கொள்வேன்” என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.