சென்னை : ஆகஸ்ட் 17, 2025 அன்று புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா அரங்கில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 37 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 4,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ராமதாஸ் தொடர்ந்து கட்சியை வழிநடத்துவார் என்று ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
கூட்டத்தில், ராமதாஸின் மூத்த மகள் காந்திமதிக்கு முக்கிய பதவி வழங்கப்படுவதாக எதிர்பார்க்கப்பட்டாலும், இதுதொடர்பான முடிவு உறுதிப்படுத்தப்படவில்லை.கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு உகந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமான கூட்டணியை உருவாக்க, ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. “2026 தேர்தல், பாமகவின் பொற்காலத்தை உருவாக்கும். மக்களின் நலனுக்காக சரியான கூட்டணியை அமைப்போம்,” என்று ராமதாஸ் உரையாற்றினார்.
மேலும், தமிழக அரசு வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு உரிய சட்டத்தை நிறைவேற்றத் தவறியதற்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.வன்னியர் சமுதாயத்தின் நீண்டகால கோரிக்கையான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. “ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல், சமூக நீதி முழுமையாக நிறைவேறாது. தமிழக அரசு இதை தட்டிக்கழிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ராமதாஸ் வலியுறுத்தினார்.
மேலும், விவசாயிகளுக்கு உதவுதல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், மற்றும் கல்வி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்னைகளை உள்ளடக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.இந்தக் கூட்டம், பாமகவின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, பாமகவின் எதிர்கால உத்திகளை வகுப்பதற்கு அடித்தளமாக அமைந்தது. “எங்கள் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். 2026 தேர்தலில் பாமக புதிய உயரங்களை எட்டும்,” என்று ராமதாஸ் உறுதியளித்தார்.