நயினார் நாகேந்திரனுக்கு செலக்டிவ் அம்னீஷியாவா எனத் தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது கையாண்டதுபொல் நயினார் நாகேந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணியை கையாளவில்லை. எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் தூக்கிப்பிடித்ததே தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து நாங்கள் விலக காரணம், அதிமுகவில் ஒருவர் தான் முதல்வர் என்று அமித்ஷா கூறினார். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா ஒரு போதும் கூறவில்லை. அண்ணாமலை அழைத்தபோது, பிரதமர் மோடிக்காகவே எந்த நிபந்தனையுமின்றி கூட்டணியில் இணைந்தேன். அண்ணாமலை என்னை பின்னிருந்து இயக்குவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு யாரும் என்னை இயக்கவில்லை. அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சியை அமித்ஷா மேற்கொண்டார். நயினார் நாகேந்திரனுக்கு செலக்டிவ் அம்னீஷியாவா எனத் தெரியவில்லை.
ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் சமரசம் பேச தயார் என முழு மனதோடு நயினார் நாகேந்திரன் கூறவில்லை. வேண்டுமானால் ஓபிஎஸ் உடன் பேசலாமென நயினார் கூறுவதில் இருந்தே அவரது மனநிலை புரிகிறது. முதலமைச்சர் வேட்பாளர் மாற்றத்தை எதிர்பார்த்து 4 மாதங்கள் காத்திருந்தோம். அது நடக்காததால் விலகினோம். கூட்டணியிலிருந்து அமமுக வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம். ஓபிஎஸ்க்கு நான் பேசாமல் வேறு யார் பேசுவார்? ஓபிஎஸ்க்கு பேச இவர் யார் என நயினார் நாகேந்திரன் கேட்கிறார். நாங்களும், ஓபிஎஸ்-ம் NDA கூட்டணியில் தொடர்வதை நயினார் நாகேந்திரன் விரும்பவில்லை. NDA கூட்டணியிலிருந்து விலக முடிவெடுத்தபோது பரிசீலனை செய்யுமாறு அண்ணாமலை, மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டார். நயினார் நாகேந்திரன் திட்டமிட்டே எங்களை கூட்டணியை விட்டு வெளியேற்றி இருக்கிறார். எங்களை அழித்துக்கொண்டு நயினார் நாகேந்திரன் ஜெயிப்பதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள் இல்லை” என்றார்.