தூத்துக்குடியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
அதேநேரம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணைக்கட்டு பகுதியில் இருந்து 11 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப் பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருங்காலக்குடி, தெற்குத்தெரு, சூரக்குண்டு, கீழையூர், தனியா மங்கலம், நாவினிப்பட்டி, தும்பைப்பட்டி, கிடாரிப்பட்டி, அழகர்கோவில், திருவாதவூர், வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடிரென்று கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.
சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானலில் தொடர் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கொடைக்கானலில் நேற்று காலை முதலே பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
பின்னர் இருள் சூழ்ந்து தொடங்கிய கனமழை, இரண்டு மணி நேரத்தை கடந்தும் நீடித்தது. இதன் காரணமாக பழனி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்..
