தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மூத்த உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு பிரிவு உதவியாளர், வனவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட, 645 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ‘குரூப் 2, குரூப் 2ஏ’ தேர்வுகள் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மொத்தம், 1,905 தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வில், 5 லட்சத்து 53,634 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் சென்னை, சேத்துப்பட்டு (Chetpet), ஹாரிங்டன் சாலை (Harrington Road), ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி பள்ளியில் (Sherwood Hall Senior Secondary School) ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 4-வது வாரத்தில் வெளியிடப்படும். கரூர் மாவட்ட நிலைமையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நேற்றைய இரவில் இருந்தே உன்னிப்பாக கவனித்து வருகிறது; தேர்வுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித சிக்கலும் இல்லை-கரூரில் குரூப்-2 குரூப்-2 ஏ தேர்வு சுமூகமாக நடைபெற்று வருகிறது. வினாத்தாள் பொதுவாக பல கட்டமாக தயாரிக்கப்படுகிறது, மேலும் பல கட்ட பரிசீலனை செய்யப்படுகிறது, மொழிபெயர்ப்பும் வந்து கொண்டிருக்கிறது இது போன்ற தவறுகளை சரி செய்யும் நடவடிக்கையில் முயற்சித்து வருகிறோம்…
இதில் மாணவர்களுக்கு பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணியிடங்களும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறோம். தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.. குரூப் 2 இல் நிச்சயமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் AI மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்ப கூடிய நபர்களின் விண்ணப்பங்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.