சென்னை : தமிழ்நாடு அரசு, தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர் நிலைகள் உள்ளிட்ட பொது உட்கட்டமைப்புகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 8 அன்று வெளியான இந்த அரசாணை, சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் உள்ள சாதிப் பெயர்களை அகற்றும் நோக்கத்துடன் அமைந்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பின்படி, இந்தப் பணி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் நிலைமைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும். இது சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் முக்கிய அடியாகக் கருதப்படுகிறது.இந்த நெறிமுறைக்கு ஏற்ப, “ஆதிதிராவிடர் காலனி”, “ஹரிஜன் குடியிருப்பு”, “வண்ணான்குளம்” போன்ற சாதிச் சார்ந்த பெயர்கள் சாதி சார்பற்றவற்றாக மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மாநகராட்சிகளில் 677 இடங்கள், நகராட்சிகளில் 455 இடங்கள் என மொத்தம் 1,132 இடங்களில் இத்தகைய பெயர்கள் உள்ளன.
கள நிலைமை மற்றும் உண்மைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு இப்பணியை கவனமாக செய்யுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களையும் உள்ளடக்கியது.மாற்று பெயர்களாக, தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளூவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற தமிழ் தலைவர்களின் பெயர்களை வைக்கலாம்.
நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை போன்ற பூக்களின் பெயர்களை அல்லது மரங்கள், இயற்கை அமைப்புகள், வரலாற்று அடையாளங்கள் அடிப்படையிலான பெயர்களை பயன்படுத்தலாம். பெயர் மாற்றத்திற்கு பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடத்தி, உள்ளூர் மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட அரசிதழில் அறிவிக்க வேண்டும். இந்தப் பணிகளை நவம்பர் 19, 2025க்குள் முடிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலவரிசை: அக்டோபர் 14க்குள் மதிப்பீடு மற்றும் விண்ணப்பங்கள் பெறுதல்; அக்டோபர் 17க்குள் ஆட்சேபனைகள் பெறுதல்; அக்டோபர் 24க்குள் செயற்குறிப்புகள் அரசுக்கு அனுப்புதல்; நவம்பர் 14க்குள் மன்றக் கூட்டத்தில் தீர்மானம்; நவம்பர் 19க்குள் அரசிதழில் அறிவிப்பு. இந்த நடவடிக்கை சமூக நீதியை வலுப்படுத்தும் என்று அரசு கூறுகிறது.