அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. டிரம்ப், மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தார். அவரது மருத்துவர் டாக்டர் சீன் பார்பபெல்லா அளித்த அறிக்கையில், டிரம்பின் இதயம், நுரையீரல் மற்றும் நரம்பு மண்டலம் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக, அவரது இதயத்தின் வயது, உண்மையான வயதான 79ஐ விட 14 ஆண்டுகள் இளமையாக, அதாவது 65 வயதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப், அமெரிக்க அதிபர் பதவியை ஏற்கும் மிக வயதான நபர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த ஆண்டு அவரது கால்கள் வீங்கி, கைகளில் காயங்கள் இருந்தபோது உடல்நிலை குறித்து சில கவலைகள் எழுந்தன.
ஆனால், அது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை என்று மருத்துவர்கள் விளக்கினர். தற்போது, டிரம்ப் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்துகிறது.