கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலைக்கு துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை குடியரசு தலைவர் சி.பி.ஆர் வருவதற்கு முன் திடிரென போலீசாரின் தடுப்புகளை மீறி, இரண்டு இளைஞர்கள் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தனி விமானம் மூலம் கோவை வந்தார். கொடிசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
துணை குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் சாலை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது துணை குடியரசுத் தலைவர் வருவதற்கு சற்று முன்னர் திடீரென போலீசாரின் பாதுகாப்புகளை மீறி இரண்டு இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சாலையில் வந்தனர்.
அங்கிருந்த போலீசார் இருவரையும் தடுக்க முயன்றும், நிக்காத இளைஞர்கள் மணிக்கூண்டு அருகே சென்றபோது தவறி விழுந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் அங்கு சாலையில் காத்திருந்த கட்சித் தொண்டர்கள் பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்து சென்றார்.
