மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
அமலாக்கத்துறை எழுதியுள்ள கடிதத்தில், மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலிப் பணியிடங்களுக்கு ஊழியர்களைப் பணியமர்த்தியதில் முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 538 காலிப் பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், அதில், 150 பேரிடம் தலா 25 முதல் 35 லட்சம் லட்சம் வரை லஞ்சம் பெற்று பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சில செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மோசடியில் ஈடுபட்டவர்களிடமும், தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமலாக்கத்துறை, தமிழக போலீசாருக்கு 232 பக்க அறிக்கையை அனுப்பியுள்ளது.
