பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கைக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை கட்ட வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தக்கூடிய பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அமைச்சர்கள் கே என் நேரு, மா.சுப்பிரமணி, ரகுபதி ஆகியோர் தலைமை தாங்கினர். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், விசிக உள்ளிட்ட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள வரைவு வழிபாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் சேதங்கள் ஏற்பட்டால் அவற்றை ஈடு செய்யும் வகையில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு ஒரு லட்ச ரூபாயில் தொடங்கி 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுக் கட்டணம் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது 100 நபர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கட்சியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும், குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிவறைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட வேண்டும், கூட்டம் நடத்தப்படுவதற்கு குறைந்த பட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் ரோடு ஷோ நடத்த வேண்டுமெனில், உரை நிகழ்த்துமிடம், சிறப்பு விருந்தினர் வருகை தரும் நேரம், எதிர்பார்க்கப்படும் கூட்டம், ஆகியவற்றை முன்கூட்டியே தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் அதோடு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு காவல் ஆய்வாளர் அந்த இடத்தை பார்வையிட்டு அங்கு எழுந்த புகார்கள், விதிமீறல்கள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய வேண்டும் எனவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட 50 சதவிகிதத்திற்கும் அதிகமான கூட்டம் கூடியது உறுதி செய்யப்பட்டால் டெபாசிட் தொகை பிடித்தம் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பரிந்துரைகள் பெறப்பட்ட நிலையில் வரும் 10ம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துகளை ஒருங்கிணைத்து முழுவடிவில் இறுதி அறிக்கை தயாரித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
