கோமாளிகளின் வீரியமிக்க கலகக்குரல்!

Estimated read time 1 min read
நூல் அறிமுகம்:
நாட்டுப்புறக் கலைகளான ராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கூத்து, கரகாட்டம், வள்ளி திருமண நாடகம் போன்றவற்றில் அவசியம் இடம் பெறுபவர் கோமாளி. மக்களை உற்சாகப்படுத்த நகைச்சுவையாகப் பேசி நடிக்கும், ஆடும் கலைஞர்கள்தாம் கோமாளி கலைஞர்கள்.
நூலாசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக சமர்ப்பித்த ‘ராசா ராணி ஆட்டத்தில் கோமாளிகள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடுதான் இந்நூலாக மாறியிருக்கிறது.
கோமாளி கலைஞர்களின் தோற்றம், பல்வேறு நாட்டுப்புறக் கலைகளில் அவர்களுடைய பல வகையான பங்களிப்புகள், தற்போது அவர்களின் வாழ்க்கை நிலை, அவர்கள் வாழ்க்கை நிலை மேம்பட பல்வேறு கல்வி அமைப்புகள், அரசு, தொலைக்காட்சி நிலையங்கள், இலக்கிய அமைப்புகள் என்ன செய்ய வேண்டும் என்ற நூலாசிரியரின் ஆலோசனைகள் எல்லாம் இடம் பெற்றுள்ளன.
பாவலர் ஓம் முத்துமாரி, கடற்கரய், செல்லா முருகேசன், வசந்த நாராயணன் ஆகியோரின் நேர்காணல்கள் கோமாளி கலைஞர்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகின்றன.
“கோமாளிகள் கலகக்காரர்கள். அவர்கள் சுரண்டல்வாதிகளை விமர்சித்தார்கள். இந்த சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை விமர்சித்தார்கள். பெண்ணடிமைத்தனத்தை விமர்சித்தார்கள்” என்ற தேனி சீருடையானின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இந்நூல் அமைந்திருக்கிறது.

*******
நூல்: கோமாளிகள் – வாழ்வும் இலக்கியமும்

ஆசிரியர்: இரா. தங்கபாண்டியன்

அகநி வெளியீடு

விலை ரூ.66/-


பக்கங்கள்: 112

Please follow and like us:

You May Also Like

More From Author