சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில் இருக்கும் பெங்ஹுவாங் மலையில், சுமார் 1500 ஆண்டுகள் பழமையான ஒரு பிரமாண்டமான கோவில் இருந்தது.
இந்த ஆலயத்தை 536 ஆம் ஆண்டில் தெற்கு லியாங் வம்சத்தில் ஃபெங்குவாங் என்பவர் கட்டினார். தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து செல்லும் இந்தக் கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்த ஒரு பெண், ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்திகளைக் கையாண்டதில் தவறு செய்ததாகக் கூறப்படுகிறது.
அந்தத் தவறு காரணமாகக் கோவிலின் கூரையில் தீ பற்றியது. மிக வேகமாகப் பரவிய அந்தத் தீ, மூன்று மாடிகள் கொண்ட கோவில் கட்டிடம் முழுவதையும் பற்றி எரித்தது. இந்த பயங்கர விபத்தில் யாருக்கும் எந்தக் காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்பது ஒரு நல்ல விஷயம்.
மேலும், அருகே இருந்த வனப்பகுதிக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால், பெரிய சுற்றுச்சூழல் சேதம் தவிர்க்கப்பட்டது. முற்றிலுமாக எரிந்து நாசமான இந்தக் கோவிலை மீண்டும் புதிதாகக் கட்டப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
