தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கண் ஆரோக்கியம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். தலைநகர் சென்னை, எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் நேற்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் கண்புரை பாதிப்பு 82%, விழித்திரை பாதிப்பு 5.6%, நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு 1% என்ற அளவில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான கண் பரிசோதனை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் குறைபாடு கண்டறியப்பட்ட 3 லட்சம் பள்ளிச் சிறார்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது, மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மாநில அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை ஆகும்.
