திருவிளையாடல்! – பாலைக் கவிழ்த்து சிவலிங்கமாக காட்சியளித்த ஈசன்..!

Estimated read time 1 min read

புதுக்கோட்டையில் திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. துர்வாசபுரம், திருமா, துருமா என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. ‘துருமா’ என்பது துர்வாச முனிவரை குறிப்பது என்று சொல்லப்படுகிறது. அவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து தவம் புரிந்ததாகவும், இத்தல இறைவனை இங்கேயே தங்கியிருந்து இன்றளவும் வணங்கி வருவதாக கூறப்படுகிறது. துர்வாச முனிவர் தவ நிலையில் இருப்பதால் இந்த ஊரில் பேரொலி எழுப்பும் வெடிகளை யாரும் வெடிப்பதில்லை என்கிறார்கள். திருப்பாதாளேஸ்வரர் ஆலயம் உருவானதற்கு, ஒரு கதை கூறப்படுகிறது. அதாவது, துர்வாசபுரத்தில் இருந்து நாள்தோறும் ஒருவன் ராசசிங்கமங்கலத்துக்குப் (ராங்கியம்) பால் கொண்டு சென்றான். அவன் பால் கொண்டு செல்லும் போது, குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், கால் தடுமாறியோ பிறவாறோ கலயத்திலிருந்து பால் கொட்டிப் போவது வாடிக்கையானது. கலயமும் உடைந்து போய்விடுமாம். வழக்கமாகிப் போன இந்த நிகழ்வுக்கு, அந்த பகுதி தூய்மையில்லாமல், கரடும் முரடுமாக இருப்பது தான் காரணம் என்று நினைத்த அவன், மண்வெட்டி, கோடரியுடன் அந்தப் பகுதிக்கு வந்தான்.

பின்னர் அந்த இடத்தைச் செம்மைப்படுத்தும் பணியில் இறங்கினான். அங்கிருந்த ஒரு மேட்டுப் பகுதியை சீர்செய்தபோது, ஒரு கல்லைக் கண்டான். அந்தக் கல்லே தான் கொண்டு செல்லும் பாலைக் கவிழ்த்துவிட காரணம் என்பதை உணர்ந்த அவன், அந்தக் கல்லை அடியோடு தோண்டி எடுக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவன் தோண்டத் தோண்ட பள்ளம்தான் பெரிதாகிக் கொண்டே போனதே தவிர, கல்லின் அடிப் பாகத்தை காண முடியவில்லை. பிறகு தான் அது ஒரு சிவலிங்கம் என்பதைக் கண்டான். ஈசன் தான் திருவிளையாடல் மூலமாக தினமும் தான் கொண்டு வரும் பாலை தடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தான். அன்று முதல் தினமும் இந்தப் பகுதி வழியாக செல்லும் போது, சிவலிங்கத்தின் மீது தான் கொண்டு வரும் பாலில் ஒரு பகுதியை அபிஷேகித்துவிட்டுச் செல்வான். இந்த தினசரி வழிபாடு காரணமாக, அந்த பால் வியாபாரி செல்வச் செழிப்பு மிகுந்தவனாக மாறினான். அவனிடம் இருந்து ஆடு மாடுகள் பெருகின. நிலத்தில் விளைச்சல் அதிகரித்தது. அவன் கோடீஸ்வரனாக மாறிப்போனான். இதையடுத்து அந்தப் பகுதியில் சுயம்புலிங்கத்திற்கு ஆலயம் எழுப்பப்பட்டது என்று தல புராணக் கதை சொல்லப்படுகிறது.

துர்வாசபுரத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பாதாளேஸ்வரர், தானே தோன்றி உருவான சுயம்புலிங்க மூர்த்தியாவார். இந்த சுயம்பு லிங்கத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகிறது. இங்கே கருவறை கட்டப்பட்டபோது விநாயகர், சகஜரிநாயகி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியவைகள் நிறுவப் பெற்றிருக்க வேண்டும். திருக்கோவிலின் இரண்டாவது கால கட்ட வளர்ச்சியில் பைரவர் சன்னிதி, அம்மன் சன்னிதி, கோவில் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டிருக்கலாம் என்பது கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. அதன்பிறகு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி, பெரிய மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் அர்த்த மண்டபத்தில் உள்ள மேல் விதானத்தில் உள்ள கற்கள் ஒவ்வொன்றிலும் இரட்டை மீன் சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பைரவர் கோவில், கோவில், பைரவர், திருப்பாதாளேஸ்வரர் கோவில், முன்காலத்தில் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் திருப்பாதாளேஸ்வரரின் நேரடிப் பார்வை பட்டு, எதிரே இருந்த வயல்வெளிகள் கருகிப்போயினவாம். சிவபெருமான் சீற்றமாக இருப்பதை அறிந்த மக்கள், அவரது கோபத்தைத் தணிக்க அவரது மூத்த மைந்தனான விநாயகப்பெருமானை அவருக்கு முன்பாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள். பொது மக்களால் இக்கோவில், ‘பாதாளேஸ்வரர் கோவில்’ என வழங்கப்பெற்றாலும், ஆலயத்திற்குள் ‘சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள் என்பதாகும். முற்காலத்தில் இந்த அம்மனை ‘சகஜரி நாயகி’ என்று அழைத் திருக்கிறார்கள். திருமணத்தடையால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவியை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். அப்படி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பெண்கள், தம்பதி சமேதராக இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர்.

சங்கடம் தீர்க்கும் பைரவர் : இத்தல பைரவர் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரிடம் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலுனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். இத்தல பைரவர் மிகவும் உக்கிரமானவர் என்பதால், பைரவருக்கு ஆராதனை செய்த கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு தருவதில்லை. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை சஷ்டி விழாவாக கொண்டாடுவது போல், இத்தல பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வு ‘சம்பா சஷ்டி விழா’ என்ற பெயரில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது.

பைரவர் சன்னிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கி, அகல் போல் ஆக்கி, அதனுள் நல்லெண்ணையை நிரப்பி, நூல் திரிகளை வைத்து விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் ஏற்படும் பில்லி- சூனியங்கள், மாந்திரீகள் எல்லாம் நீங்கிவிடுமாம். அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கே வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறப்பாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author