நடிகர் விஜய் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரின் ஆழமான நட்பு குறித்து தமிழ் சினிமா வட்டாரத்தில் பலரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வெற்றி பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், இந்த நேரத்தில் தான், தன் நண்பன் விஜய் குறித்து இத்தனை ஆண்டுகளாக மனதுக்குள் பூட்டி வைத்திருந்த ஒரு பெரிய ரகசியத்தை நடிகர் ஸ்ரீமன் முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
2001-ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில், விஜய், சூர்யாவுடன் வில்லன் பாத்திரத்தில் நடித்த ஸ்ரீமனும் பலரின் நினைவில் இருப்பார். குறிப்பாக, அந்தப் படத்தின் பிரபலமான ‘பெண்களோடு போட்டி போடும் பாடல்’ பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பொதுவாக ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவரை கதாநாயகர்களுடன் சேர்த்து ஆட வைப்பது அரிது. ஆனால், அந்தப் பாடலில் விஜய், சூர்யாவுடன் ஸ்ரீமனும் இணைந்து ஆடியிருப்பார். இதற்கு முழுமையான காரணம் அவருடைய உயிர் நண்பர் விஜய்தான் என ஸ்ரீமன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.விஜய் தான், இயக்குநர் சித்திக்கிடம் தன் நண்பன் ஸ்ரீமன் நன்றாக நடனம் ஆடுவார் என்றும், அவரையும் அந்தப் பாடலில் ஆட வைக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறார். இதன் பின்னரே ஸ்ரீமன் அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கிறார்.
இந்தக் கருணை மிகுந்த ரகசியத்தை சுமார் 25 வருடங்களாக தன் மனதுக்குள் வைத்திருந்த ஸ்ரீமன், தற்போது அதை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்கும் விஜய்யே தான் காரணம் என்றும் ஸ்ரீமன் குறிப்பிட்டிருக்கிறார். ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் ஸ்ரீமன் நடித்த கௌதம் கதாபாத்திரத்தில் முதலில் வேறு ஒரு நடிகர் தான் தேர்வாகியிருக்கிறார். ஆனால், அவர் இயக்குநர் சித்திக் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதை கவனித்த விஜய் மற்றும் சூர்யா இருவரும் சேர்ந்து இயக்குநரிடம், “ஸ்ரீமனை கௌதமாக நடிக்க வைக்கலாமே” என்று யோசனை தெரிவித்துள்ளனர். அப்போது மற்றொரு படப்பிடிப்பில் இருந்த ஸ்ரீமனுக்கு விஜய் போன் செய்து பேசியுள்ளார். உடனே ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி வந்த ஸ்ரீமன், படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.
ஸ்ரீமன் நடித்ததைப் பார்த்த இயக்குநர் சித்திக், அவருக்கு கௌதம் கதாபாத்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு முன்னணி நடிகர், தான் ஒரு நிலைக்கு வந்த பின்னரும் தனது நண்பர்களுக்காகப் பரிந்துரைத்து, வாய்ப்புகள் பெற்றுத் தந்திருக்கிறார் என்பதை ஸ்ரீமன் வெளிப்படுத்தியிருப்பது, திரையுலக நண்பர்கள் மீதான விஜய்யின் அன்புக்குச் சான்றாக உள்ளது.
