தமிழக பாஜக-வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது.
இதில், அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேர்தல் பொறுப்பாளர் பாண்டே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், கடந்த தேர்தலில் தி.மு.க.வின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒற்றைச் செங்கல்லைக் காட்டிப் பிரச்சாரம் செய்ததைச் சுட்டிக்காட்டி, பதிலுக்கு ஒரு சவால் விடுத்தார்.
அவர் பேசும்போது, “செங்கல்லைக் காட்டி வெற்றி பெற்றதாகச் சொல்கிறார்கள். நான் சவால் விடுகிறேன், எங்களிடம் செங்கோல் இருக்கிறது. நாங்கள் இந்த தேர்தலில் செங்கோலைக் கொண்டே பிரச்சாரம் செய்வோம். உலகமே வியந்து பார்க்கும் பிரதமர் மோடி தலைமையில் நாங்கள் களமிறங்குகிறோம்.
வருகிற தேர்தலில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, கைகள் உயர்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலர்ந்தே தீரும்,” என்று உறுதியாகக் கூறினார். மேலும், தங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மோடியை அழைத்து வந்து தமிழக சட்டமன்றத்திலும் வெற்றிச் செங்கோலை நிறுவி வெற்றியை கொண்டாடுவோம் என்றும், அ.தி.மு.க. கூட்டணியுடன் சேர்ந்து தேசத்தை திறம்பட ஆளும் கட்சி தமிழகத்திலும் நல்லாட்சி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
