தமிழில் நவீன இணையவெளித் தொழில்நுட்பம் பற்றி எழுதுவதில் முன்னணி எழுத்தாளராக இருப்பவர் சைபர் சிம்மன். அவரது இயற்பெயர் நரசிம்மன். கணிணி, இணையம், செயற்கை நுண்ணறிவு பற்றி தமிழில் நீண்டகாலமாக எழுதிவருகிறார்.
சொந்த இணையதளம் தவிர, இணைய மலர் என்ற செய்தி மடலில் தொடர்ந்து எழுதுகிறார். இணையம் பற்றிய தற்கால போக்குகள் பற்றி ‘அறம்’ இணையம் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எதிர்காலத்தில் முகநூல் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர், “முகநூலுக்கான காலம் முடிந்துவிட்டது. இளைஞர்கள் Snapchat-ஐ அதிகம் பயன்படுத்துகின்றனர். முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்க பயன்படுத்துகிறது.
இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள். ஆதிக்கம் கொண்டவை.
எனவே, இவைகளுக்கு மாற்று தேவை. ‘காலாவதியாகி விட்டது’ என்று எல்லோரும் சொல்லுகிற மார்க்சிய நோக்கில் தொழில்நுட்பத்தை அணுகுவதும் அவசியம். மேலும், சமூக ஊடக பரப்பில் மையம் இல்லாத சேவைகள் உருவாகி வருகின்றன. கூட்டு பெருவெளி என இவை குறிப்பிடப்படுகின்றன.
ஆங்கிலத்தில் ’பெடிவெர்ஸ்’ என்கின்றனர். உதாரணமாக யூ டியூபிற்கு மாற்றாக peer tube வந்துள்ளது. டிவிட்டருக்கு மாற்றாக Mastadon வந்துள்ளது.
முகநூலுக்கு மாற்றாக பிரெண்டிகா (Friendica) உள்ளிட்ட சேவைகள் உள்ளன. ஏற்கனவே டயாஸ்போரா (Diaspora) எனும் சேவை அறிமுகமாகி உள்ளது.
இந்த சேவைகள் பயனாளிகளுக்கு அதிக முக்கியத்துவமும், அதிகாரமும் அளிப்பவை. அடிப்படையில் பெரு நிறுவனங்களின் வர்த்தக போக்கிறது எதிரானவை. எதிர்கால தன்மை கொண்டவை” என்று அந்த பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
