இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தயாராகி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்ற இந்திய அணி தற்போது நடப்பு சாம்பியனாக திகழ்கிறது.
எனவே அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்தியா வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க தயாராகி வருகின்றது.
அதற்கு பந்து வீச்சுத் துறையில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்ட அவருடைய கேரியர் முடிந்ததாக கருதப்பட்டது. இருப்பினும் மனம் தளராத அவர் தனது பந்து வீச்சை மெருக்கேற்றி ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அசத்தலாக விளையாடினார்.
2026 டி20 உ.கோ திட்டம்:
குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்ல முக்கிய பங்கற்றிய அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிலிருந்து சிறப்பாக பந்து வீசி வரும் சக்கரவர்த்தி ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றி பெற வைப்பதற்கான திட்டங்களையும் வகுத்து வருவதாக சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
எனவே அடுத்த வருடம் தம்மால் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி வருண் பேசியது பின்வருமாறு. “உங்கள் மீது அழுத்தத்தைப் போட்டு உலகக் கோப்பைக்கு தயாராவது மிகவும் முக்கியம். சவால் இல்லாத போது உங்களுக்கு நீங்களே சவால் விடுக்க வேண்டும்”
தயாராகும் வருண்:
“ஒருவேளை போட்டிகள் எளிதாக தெரிந்தால் மனதளவில் உங்களுக்கு நீங்களே அழுத்தத்தை உண்டாக்கி சவால் விடுக்க வேண்டும். சரியான லென்த்தில் எதிரணிகளை புரிந்து கொண்டு பந்து வீசுவது வெற்றிக்கான சாவியாகும். அந்த ஒரு விஷயத்தை நான் உலகக் கோப்பைக்கு எடுத்துச் செல்வேன். எதிரணியை புரிந்து கொள்ளும் போது என்னால் நன்றாக பந்து வீச முடியும் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: அண்டர்-19 ஆ.கோ: இலங்கையை நாக் அவுட்டாக்கிய இளம் இந்தியா.. ஃபைனலில் பாகிஸ்தானுடன் மோதல் எப்போது?
“என்னுடைய திட்டம் எளிது. அடிப்படைகளை பின்பற்றி என்னுடைய லென்தில் பவுலிங் செய்ய வேண்டும். சில நேரங்களில் அது வேலை செய்யும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் அது வேலை செய்தது. அதையே நான் தொடர்வேன். நீங்கள் நம்பிக்கையுடன் இல்லாத போது உங்களுடைய மனநிலை பாதிக்கும். எனவே நீங்கள் நம்பிக்கையுடன் உங்களுடைய திறமைக்கு ஆதரவளிப்பது முக்கியம். அப்போது தான் உங்களால் திட்டத்தை அதிகம் மாற்றாமல் செயல்படுத்த முடியும். அதுவே தொடர்ச்சியாக அசத்துவதன் ரகசியமாகும்” என்று கூறினார்.
The post 2026 டி20 உ.கோ இந்தியா ஜெய்க்க.. இந்த திட்டங்களை உருவாக்கி வரேன்.. கண்டிப்பாக அசத்துவேன்.. வருண் நம்பிக்கை appeared first on Cric Tamil.
