நடப்பாண்டில் இந்தியா 4ஆவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்ததற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெரும் போராட்டம், பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்த போதும் இந்தியா சீரான வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது.
அந்த வகையில் பிரதமர் மோடி அரசின் புதிய சீர்த்திருத்தங்கள் மற்றும் முக்கிய திட்டங்கள் மூலம் இந்திய பொருளாதாரம் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா தொடர்ந்து நல்ல வளர்ச்சி விகிதங்களுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் இதன் மூலம், 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 4வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2030ம் ஆண்டுக்குள் 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஜெர்மனியை முந்தி 3வது இடத்தை அடையும் எனவும் மத்திய அரசு கணித்துள்ளது.
வலிமையான பொருளாதாரமும் தொடர்ச்சியான சீர்திருத்தங்களுமே இதற்குக் காரணம் என மத்திய அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
