வெனிசுலா : தலைநகர் கராகஸ் உட்பட பல மாநிலங்களில் அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
அதிகாலையில் தொடங்கிய இந்தத் தாக்குதல்களில் ராணுவ நிறுவனங்கள், விமான தளங்கள் குறிவைக்கப்பட்டன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனால் வெனிசுலாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. “வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு. இது மீண்டும் இடதுசாரி – வலதுசாரி மோதலுக்கு வித்திட்டுள்ளது” என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வெனிசுலாவின் இறையாண்மையை மீறிய இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
கியூபா அதிபர் மிகேல் டியாஸ் கானல், “வெனிசுலா மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதிப் பிரதேசமாக இருக்கும் எங்கள் பகுதி கொடூரமாகத் தாக்கப்படுகிறது. இது லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு எதிரான அமெரிக்க அரசின் தீவிரவாதத்தை காட்டுகிறது” என்று கண்டனம் தெரிவித்தார். கியூபா இதை உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது.
ஈரானும் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளது. “சர்வதேச சட்டங்களை மீறி வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது” என்று ஈரான் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு மற்றும் வெனிசுலா எண்ணெய் வளங்களை கைப்பற்றும் நோக்கம் கொண்டது என்று வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவில் பதற்றம் அதிகரித்துள்ளது. சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் என்று பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வெனிசுலா மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் விளைவுகள் உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
