கேரளாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவும் நிலையில், அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,324 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனாவின் மாறுதலான ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வகை தொற்று சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்திய பயணிகளிடம் பரிசோதனை செய்யப்ட்ட போது பல மாதங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டது என்றார்.
நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், எனினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கோவிட்-19 தொற்று காரணமாக 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பனூர் நகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.