தனியார் பள்ளியில் இலவச கல்வி… மறக்காம அப்ளை பண்ணுங்க…

Estimated read time 1 min read

பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி நலனுக்காக, தனியார் பள்ளிகளில் இலவசச் சேர்க்கை பெறுவதற்கான கால அட்டவணையைத் தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற அனைத்துத் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், 8-ஆம் வகுப்பு வரை கட்டணமின்றி இலவசமாகப் பயில முடியும்.

வரும் 2026-2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்குப் பெற்றோர் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத் தொடக்கம்: ஏப்ரல் 20, 2026 விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 18, 2026 பெற்றோர் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகே உள்ள அதிகபட்சம் 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆதரவற்றோர், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டோர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்களுக்குக் குலுக்கல் இன்றி நேரடிச் சேர்க்கை உண்டு.

பொருளாதார நலிந்த பிரிவினர்: குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது பின்வரும் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பது அவசியமாகும். அதன்படி குழந்தையின் புகைப்படம். பிறப்புச் சான்றிதழ். இருப்பிடச் சான்று (ரேஷன் கார்டு/ஆதார்). வருமானச் சான்றிதழ் (நலிந்த பிரிவினருக்கு). சாதிச் சான்றிதழ். முன்னுரிமை கோருபவர்களுக்கான சிறப்புச் சான்றிதழ்கள். மேலும் தமிழகத்தில் 2013-இல் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 5.7 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author