“மன் கி பாத்” நிகழ்ச்சி தொடர்பான தங்களது தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதன் பிறகு, “மன் கி பாத்” (மனதின் குரல்) என்கிற நிகழ்ச்சி மூலம், வானாலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 2014 அக்டோபர் மாதம் முதல் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின், 100-வது எபிசோடு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதன் பிறகும், இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான வரும் 31-ம் தேதி 108-வது நிகழ்ச்சி ஒலிபரப்பாகவிருக்கிறது.
இந்த நிலையில், “மன் கி பாத்” நிகழ்ச்சி தொடர்பான தகவல்களையும், கருத்துகளையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த முறை நாங்கள் ஆராயும் தலைப்பு ஃபிட் இந்தியா.
இது இளைஞர்களின் இதயங்களுக்கு நெருக்கமான ஒரு தலைப்பு. இந்த இயக்கத்தின் தனித்துவமான அம்சங்களில், புதுமையான சுகாதார தொடக்கங்களைப் பற்றி விவாதிக்கவும், இளைஞர்கள் இந்திய உடற்பயிற்சி முறைகளை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் தெரிவிக்கலாம்.
மேலும், மக்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான உடற்பயிற்சி நடைமுறைகள் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான புதுமைகளையும் பகிர்ந்து கொள்ளலாம். 2023-ம் ஆண்டில் தினை போன்ற சூப்பர் ஃபுட்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன.
ஆகவே, ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய உணவுகளைப் பாதுகாப்பதில் இளைஞர்கள் முன்னணியில் இருந்தால், அவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம். அதேபோல, தியானம் மற்றும் யோகா மூலம் மக்கள் ஆன்மிக நல்வாழ்வை மேம்படுத்துகிறார்கள் என்றால், அவர்களின் முயற்சிகளைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்.
‘ஆரோக்கியமான நான், ஆரோக்கியமான இந்தியா’ பிரிவின் கீழ் மக்கள் தங்கள் அனுபவங்களை “நமோ” செயலியில் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், MyGov Open Forum-ல் மக்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். தவிர, 1800-11-7800 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு டயல் செய்து, பிரதமருக்கான தங்கள் செய்தியை இந்தி அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யலாம்.
தொலைபேசி இணைப்புகள் டிசம்பர் 29-ம் தேதி வரை திறந்திருக்கும். அதேபோல, மக்கள் 1922 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம். அல்லது SMS மூலம் பெறப்பட்ட இணைப்பைப் பின்தொடர்ந்து நேரடியாகப் பிரதமருக்குத் தங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.