தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாலை 6 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்தார். அவருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்நது விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பார்க் சென்ற பிரதமர், வாகன பேரணியில் பங்கேற்றார்.
6.30 மணிக்கு பனகல் பார்க்கில் தொடங்கிய பேரணி இரவு 7.15 மணி அளவில் தேனாம்பேட்டை சிக்னலில் நிறைவடைந்தது.
கையில் தாமரை சின்னத்தை ஏந்தியபடி சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களை தூவியும், கைகள் அசைத்தும் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.பிரதமருடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் உடன் சென்றார்.
தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை பால் கனகராஜ், மத்திய சென்னை வினோஜ் பி.செல்வம், உள்ளிட்டோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
நாளை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்லும் மோடி, அங்கு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இதனைத்தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து பிரதமர் கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து, மேட்டுபாளையம் செல்லும் பிரதமர், அமைச்சர் எல்.முருகனுக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.