Web team
பெருங்காட்டுச் சுனை !
நூல் ஆசிரியர் : கவிஞர் கூடல் தாரிக் !
9942530284
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் வளாகம், காந்தி நகர்,
முக்கியச் சாலை, வத்தலகுண்டு 624 202
80 பக்கங்கள் விலை ரூ. 70. 04543 – 297297
**************
முனைவர் கா.பீர் முகம்மது தாரிக், கூடல் தாரிக் என்னும் பெயரில் எழுதி வருபவர். கம்பம் இலாஹி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருபவர். முதல் நூல் ‘ஆலிவ் இலைகள்’, இரண்டாவது நூல் ‘பெருங்காட்டுச் சுனை’. இந்த நூல் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் மிகவும் மதித்துப் போற்றும் மாமனிதர் முகம்மது முத்து, மீரா லெப்பை மரைக்காயர் அவர்களாலும் அவரது மகள் முனைவர் நசீமா மரைக்காயர் அவர்களாலும் வெளியிடப்-பட்டது.
இனிய நண்பர் ஓவியா பதிப்பக உரிமையாளர் கவிஞர் வதிலை பிரபா பதிப்புரை நன்று. அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு, ஓவியங்கள் யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. முனைவர் ஆ. பிருஜமு, நளீமா மரைக்காயர் கவிஞர் சுப்ரா ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன.
பிணத்தை எரிக்கும்போது வெப்பம் தாங்காமல் சற்று மேல் எழும்பும் என்ற செய்தியை அறிந்து வரைந்த கவிதை நன்று.
எரியூட்டப்பட்ட உடல்
எழுந்து வீட்டு பிரேதம்
வெட்டியானிடம் பேச நினைத்திருக்கலாம்
பிரபஞ்சத்தின்
ரகசியமொன்றை !
இவ்வாறு மேல் எழும்பும் பிணத்தை கம்பால் அடித்து முழுவதுமாக எரிப்பது தான் வெட்டியான் வேலை. கவிஞரின் கற்பனை நன்று. ஒவ்வொரு பிணத்திடம் ஒவ்வொரு ரகசியம் எரிந்து விடுவதும் உண்மை தான்.
ஒரு கவிதை படிக்கும் போது, படிக்கும் வாசகரின் மலரும் நினைவுகளை மலர்விப்பதாக இருந்தால், அது எழுதிய கவிஞனின் வெற்றி. இக்கவிதை படிக்கும் போது எனது சிறுவர் காலம் நினைவிற்கு வந்தது உண்மை.
வில்லாய் வளைத்திருந்த
முப்பாட்டனின்
தோளில் அமர்ந்து
வானம் ரசித்தது
இன்னமும்
நினைவில்!
பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உலகம். மனிதனின் வளத்திற்காக, நலத்திற்காக உள்ளவற்றை மனிதன் பஞ்ச பூதத்தையும் சிதைத்து வருகிறான்.
மலையை வெட்டி நாடு கடத்தி பணம் சேர்க்கிறான் . மரங்களை வெட்டி பணம் சேர்க்கிறான்.தண்ணீரை குளிர்பானமாக்கி பணம் சேர்க்கிறான் .
இப்படி தொடர்ந்து இயர்கையின் மீதான தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கிறான். பூமி பொறுக்காமல் பூகம்பம் கடைசி என்று சீற்றம் கொள்கிறது. மலையை சாபத்தை உணர்த்தும் கவிதை நன்று.
மாண்டுபோன மலையின்
மரணம் செய்தியை
உலகெங்கும் எடுத்துச் செல்கின்றன
காய்ந்த சருகுகள்
உலகமயம் என்ற பெயரில் வந்த அரக்கன்
நமது பண்பாட்டைச் சீரழித்து விட்டான்.
தொன்மை நன்மை ஒழித்து,
தீமை நோயை பதிவாகத் தந்தான் !
அதனை உணர்த்திடும் கவிதை நன்று.
நகரமயமாதலின் நீட்சியில்
கவலை போய் விட்டன
மண்வாசனையும்
பெருசுகள் என்பதான சொல்லாடலும் !
அப்பா, மகள் பாசம் என்பது சொல்லில் அடங்காது. ஒரு பெண் எதையும் பொறுத்துக் கொள்வாள். ஆனால் அவளது அப்பாவைப் பற்றி தவறாக பேசினால் பொங்கி எழுவாள். அப்பாவும் மனைவி சொல்லை கேட்காதவர். மகள் சொன்னாள் கேட்டுக் கொள்வார். அப்பா மகள் பாசம் உணர்த்தும் கவிதை நன்று.
திடீர் மழை பொழிகையில்
குடையின்றி சென்ற
தன் மகள் குறித்த கவலையில்
மதியத் தூக்கமின்றி
தவிக்கிறான்
பொறுப்புள்ள தந்தை !
ஆசிரியர் பணியோடு சுருங்கி விடாமல் கவிதையில் ஆர்வம் கொண்டு எழுதி நூல் வெளியிடுவதற்கு பாராட்டுக்கள்.
அடுத்த பதிப்பில் ‘வாக்கிங்’ போன்ற ஆங்கிலச் சொல் தவிர்த்திடுங்கள்.
பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் ஆகி விட்டன. இக்கவிதை படித்த போது எங்க ஊர் மதுரையில் தரைமட்டமாக்கப்பட்ட ஆசியாவின் பெரிய திரையரங்கம் “தங்கம்” நினைவிற்கு வந்தது.
திருமண மண்டபமாய்
மாறிப்போன
சீற்றுக் கொட்டகையின்
நினைவுகள் !
மதுரையில் ஜெயராஜ் என்ற திரையரங்கம் திருமண
மண்டபமாய் ஆனது. அதன்பின் நட்சத்திர விடுதியாகி
விட்டது. இப்படி நினைவுகளை மலர்வித்தது கவிதை.
ஐந்து ஆண்மக்கள் பெற்று
யாராலும் கவனிக்கப்படாமல்
ஆப்பம் சுட்டு பிழைத்த
செல்லாயிக் கிழவி
இடுகாடு அடைந்த
தருணத்தில்
ஊரே அழுதது அவள் இறந்து
ஆண்டுகள் பலவாயிற்று என்பதை அறியாமல் !
மனதை நெகிழ வைக்கும் கதை. ஐந்து ஆண்மக்கள் பெற்று வளர்த்து அவர்கள் நன்றி மறந்த போதே செல்லாயி கிழவி மனமுடைந்து இறந்து விட்டாள். நடைபிணமாகவே வாழ்ந்தால் என்பதை வித்தியாசமாக உணர்த்தியது சிறப்பு.
கவிதையின் மூலம் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். இக்கவிதை படிக்கும் போது பேருந்துப் பயணமும் சிறுமியின் சேட்டையும் நினைவிற்கு வருவது இயல்பாக உள்ளது.
களைப்பெதுவும் இல்லாத
பேருந்துப் பயணமொன்றில்
மீசை பிடித்திருக்கிறான்
முன் இருக்கை மழலை
சாரலில் நனைந்த
தலையிணைத் துவட்ட
கைகுட்டை தருகிறான்
ஏ.டி.எம். காவலாளி !
அடுத்த பதிப்பில் தருகிறார் என்று மாற்றி விடுங்கள். உதவிய நபரை மதிக்க வேண்டும். பயணமொன்றில் என்பதில் ‘ல்’ விடுபட்டு உள்ளது.
வித்தியாசமான கவிதை கிராமங்களில் பல வீடுகளில் மான் கொம்பு மாட்டி இருப்பார்கள். வீரத்தை பறைசாற்றும் விதமாக இதுவரை உணர்ந்து இருந்தோம். அதற்குள் உள்ள சோகத்தை படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் கூடல் தாரிக்.
பழமையான வீடொன்றில்
பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள
மானின் கொம்புகளில்
இன்னமும் படிந்திருக்கும்
உயிர்ப்பயமும், அதிர்ச்சியும்
தப்பியோட முயன்ற
களைப்பும்
கானகம் பிரிந்த சோகமும்
நீங்கள் குறிப்பிடும்
தாத்தாவின் வீரமும் !
இந்தக் கோணத்தில் இதுவரை யாருமே சிந்தித்தது இல்லை. புதிய சிந்தனை பாராட்டுக்கள்.
தொட்டி மீனுக்கு
ஆறுதல் சொன்னது /
குழம்பு மீன்
பயப்படாதே
மனிதர்களுக்கு
பிணங்களைத் தான் பிடிக்கும் !
இப்படி வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.
ஏகாந்தத்தின் மடியில் அமர்ந்து
ரசிக்கத் துவங்குகிறேன்
அலை நிகழ்த்தும்
அதிசயத்தை
ஆடை விட்டகலாமல்
மணல் !
சாட்சிப்படுத்தும் கவிதைகள் நிறைய உள்ளது. கடன் வாங்காமல் வாழ்வதே நிம்மதியான வாழ்வு. தேவைகளைக் குறைத்து எளிமையாக வாழப் பழகினால் நிம்மதி நிலைக்கும். கடன் வாங்குவதால் வரும் தொல்லை உணர்த்தும் கவிதை.
வட்டிக்குப் பணம் கொடுத்தவன்
பிணமெடுக்க
விட மாட்டெனெ
வாசல் முன் அமருகையில்
மீண்டுமொருமுறை
மரணித்துக் கிடந்தான்.
அறையினுள் பிரேதமாய்
கிடத்தப்பட்டிருந்தவன் !
நூல் ஆசிரியர் கவிஞர் கூடல் தாரிக் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். கவிதையில் மூன்றாவது நூலும் மலரட்டும்.