தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே, மருந்து நிறுவனம் ஒன்றில் ஒன்றில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள், முதல் மாடியிலிருந்து குதித்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
ஹைதராபாத்தில் உள்ள சாத் நகரில் ஆல்வின் பார்மா என்ற பெயரில் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த நிறுவனத்தில் சுமார் 300 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். மதியப் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய நிலையில், நிறுவனத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
வெல்டிங் பணியின்போது ஏற்பட்ட தீப்பொறி தெர்மாகோலின் மீது பட்டு தீப்பிடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வேகமாகப் பரவிய தீ, ஆல்கஹால் சேமித்து வைத்திருந்த கிடங்கில் பற்றியதால், கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஊழியர்கள் முதல் மாடியிலிருந்து கீழே குதித்தனர். மேலும், கட்டடத்தில் சிக்கியவர்கள் வெளியே வருவதற்காக கயிறு கொடுத்து உதவிய சிறுவன் சாய் சரணைக் காவல்துறையினர் வெகுவாகப் பாராட்டினர்.