விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு

Estimated read time 1 min read

சென்னை,

விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது;

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, இன்று, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அலுவலர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று நான் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென்றும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மெத்தனால் இருப்பை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றைக் கைப்பற்றி அழித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், விஷச்சாராய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான மூலகாரணத்தையும் காவல் துறையினர் கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், அங்கு அவர்களுக்குத் தேவையான சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளேன்.

உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உடனடியாகச் சென்று, சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை இரண்டு தினங்களில் வழங்குவார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்.”

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author