விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 5 வேட்பாளர்களும், 2-ம் நாளில் ஒருவரும், 3-ம் நாளில் ஒருவரும், 4-ம் நாளான நேற்று 10 பேரும் என மொத்தம் 17 வேட்பாளர்கள் 20 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனு தாக்கலின் 5-ம் நாளான இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா, அவருக்கு மாற்று வேட்பாளராக அன்னியூரை சேர்ந்த கலைச்செல்வி, தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான ராஜமாணிக்கம், யுனைடெட் ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் வேட்பாளரான சேகர், தேசிய சமூக நீதிக்கட்சி வேட்பாளரான ஜனார்த்தனன், சுயேச்சை வேட்பாளர்களாக செல்வி, விநாயகம் ஆகிய 7 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் தாக்கம் கட்சியை சேர்ந்த முத்தையா கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இவர்களோடு சேர்த்து இதுவரை இத்தொகுதியில் 24 பேர் 28 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என தெரிகிறது.