நடு இலையுதிர்கால விழாவின் வருகையினை முன்னிட்டு 2024ஆம் ஆண்டு பெய்ஜிங் நடு இலையுதிர்கால விழாவின் விளக்குக் கண்காட்சி செப்டம்பர் 15ஆம் நாள் நடைபெற்றது. 105 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் இந்த நடவடிக்கை, ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டு, விளக்குகளைப் பார்வையிடுதல், உணவுகளைச் சுவைத்தல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகிய செயல்பாடுகளைக் கொண்டதாகும்.
இந்தக் கண்காட்சியில் பொருள் சாரா கலாசார பாரம்பரியமான ஜிகோங் விளக்கு தயாரிக்கும் நுட்பங்கள், பெய்ஜிங்கின் சிறப்பான கலாச்சாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட விளக்குக் குழுக்களாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றில், 70 சதவீத விளக்குகள் பெய்ஜிங்கின் உள்ளூர் கலாசாரத்தை வெளிப்படுத்துபவைகளாக அமையும். குறிப்பாக, காலத்தின் ஓவியம் என்றழைக்கப்படும் 120 மீட்டர் நீளமுள்ள விளக்கு குழு, வரலாற்றில் முன்பில்லாத அளவு பதிவை அடைந்துள்ளது. மேலும், கண்காட்சி காலம், நடவடிக்கையின் அளவு, விளக்குகளின் எண்ணிக்கை, விளக்குகளின் வடிவமைப்பு ஆகியவை, பெய்ஜிங் விளக்குக் கண்காட்சியின் வரலாற்றில் முன்பு கண்டிராத வகையில் அமைந்துள்ளன.
அக்டோபர் 31ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த விளக்குக் கண்காட்சி சுமார் 6 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.