சீனாவின் கான்சூ மாநிலத்தின் ஜிஷிஷான் மாவட்டத்தில் டிசம்பர் 18ஆம் நாள் ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 20ஆம் நாள் கூறுகையில், இந்நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷியா, கம்போடியா, பாகிஸ்தான், மாலத் தீவு, தென் கொரியா, ஜெர்மனி, இத்தாலி, வங்காளத்தேசம், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுத் தலைவர்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர் என்றார்.
மேலும், ஆப்கானிஸ்தான், நேபாளம், எகிப்து, சௌதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஜோர்டான், அமெரிக்கா, கனடா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் சீனாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளன. இதற்கு சீனா மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் பல்வேறு மீட்பு பணிகள் முழுமூச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தலைமையிலும், நாட்டின் பல்வேறு துறைகளின் ஆதரவுடனும், அங்குள்ள மக்கள் சீற்றத்தைத் தோற்கடிப்பது உறுதி என்றும் அவர் கூறினார்.