பொது மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், பிலிப்பைன்ஸ் அண்மையில் அமெரிக்காவுடன் இணைந்து 2025ஆம் ஆண்டுக்கான ராணுவப் பயிற்சியை நடத்தியுள்ளது. இப்பியற்சி பிலிப்பைன்சின் வடக்கிலுள்ள லூசோன் தீவில் நடத்தப்பட்டதோடு சீனத் தைவான் பிரதேசத்துக்கு மிக நெருங்கிய பகுதியான பாதேன் தீவுகளின் கடற்பரப்பிலும் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா பிலிப்பைன்ஸுடன் இணைந்து தைவான் நீரிணை பிரச்சினையில் ஈடுபடுவதை இது தெளிவாகக் காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கையில், எந்த நாடும் தைவான் பிரச்சினையைச் சாக்குபோக்காகக் கொண்டு பிரதேசத்தின் ராணுவ ஏற்பாடுகளை வலுப்படுத்தி மோதலைத் தூண்டி பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைச் சீர்குலைப்பதைச் சீனா உறுதியாக எதிர்க்கும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த சில பத்து நாட்களுக்கு முன்பாக தென் சீன கடலில் பல்வேறு தரப்புகளின் செயல்பாட்டு அறிக்கையை செயல்படுத்துவதற்கான 47ஆவது கூட்டு பணிக் கூட்டத்தை சீனா மற்றும் ஆசியான் நாடுகள் பிலிப்பைன்ஸில் நடத்தின. அப்போது தென் சீனக் கடலின் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க பல்வேறு தரப்புகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன. ஆனால், பிரதேசத்தின் அமைதியைப் பொருட்படுத்தாமல், பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுடன் ராணுவ பயிற்சியை நடத்தியுள்ளது. பிலிப்பைன்ஸின் இச்செயல் நெருப்புடன் விளையாடுவது போன்றதாகும். எதிர்காலத்தில் இதற்கான விளைவுகளை அந்நாடு நிச்சயம் சந்திக்கும்.