ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தினின் அழைப்புக்கிணங்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 7ம் நாள் முதல் 10ம் நாள் வரை, ரஷியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். பயணத்தின் போது மாஸ்கோவில் நடைபெறவுள்ள நாசி ஜெர்மனிக்கு எதிரான சோவியட் போர் வெற்றி பெற்றதன் 80வது ஆண்டு நிறைவு விழாவில் ஷிச்சின்பிங் பங்கெடுக்கவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், சீன-ரஷிய உறவின் வளர்ச்சி, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் ஆகியவை குறித்து இரு நாட்டு அரசுத் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
அவர்கள் எட்டும் ஒத்த கருத்துகள், சீன-ரஷிய அரசியல் நம்பிக்கையை மேலும் ஆழமாக்கி, பல்வேறு துறைகளின் பயன் தரும் ஒத்துழைப்பை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நலன்களை விளைவித்து, சர்வதேச சமூகத்துக்கு நிலைத்தன்மை மற்றும் ஆக்கப்பூர்வமான சக்தியை ஊட்டும் என்று நம்புகிறோம்.
இவ்வாண்டு, ஐ.நா நிறுவப்பட்ட 80ம் ஆண்டு நிறைவாகும். சீனாவும், ரஷியாவும், ஐ.நா, பிரிக்ஸ் அமைப்பு முதலிய பலதரப்பு மேடைகளின் மூலம் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, ஒருசார்புவாதம் மற்றும் மேலாதிக்கத்தை எதிர்த்து, சமமான ஒழுங்கான உலக பல துருவமயமாக்கத்தையும், பொது நலன் தரும் பொருளாதார உலகமயமாக்கத்தையும் முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.