அடுத்த தலைமுறை போர் கப்பல்கள் : தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்ற கொல்கத்தாவின் GRSE நிறுவனம்!

Estimated read time 1 min read

இந்தியக் கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர் கப்பல்களைக் கட்டமைப்பதற்கான ஒப்பந்தத்தைக் கொல்கத்தாவின் GRSE நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் வருங்கால போர்க்கப்பல்கள் குறித்தும் அதன் மூலம் பாதுகாப்புத்துறை அடையும் உச்சக்கட்ட வளர்ச்சி குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியக் கடற்படைக்காக ஐந்து நவீன ‘அடுத்த தலைமுறை போர் கப்பல்களை கட்டித் தரும் ஒப்பந்தத்தில், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட அரசு நிறுவனமான Garden Reach Shipbuilders & Engineers Ltd (GRSE) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ. 25,000 கோடி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் சொந்த கப்பல் கட்டும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மைல் கல்லாகக் கருதப்படும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியக் கடற்படையை நவீனமாக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத் திறமையும், நீண்ட கால அனுபவமும், பல்வேறு முக்கியமான கப்பல்களைத் தயாரித்த முன்னணி சாதனைகளும் நம்பிக்கையைக் கொடுக்கவே இது சாத்தியமாகி உள்ளது. புதிதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க்கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்க்கையில், மேம்பட்ட தாக்குதல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இதன் பலத்தை உணர்த்துகிறது. கப்பலின் மேற்பரப்பு தளங்களிலிருந்தே ஏவுகணைகள் ஏவும் வசதி, எதிரிகளின் ஏவுகணைகளைத் திறம்பட எதிர்க்கும் பாதுகாப்பு திறன், எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான ஆயுதங்கள், அதே போலக் கணிப்பைக் கொண்டு, மிகத் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும் திறன் எனப் பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

அதோடு, தான் பயணிக்கும் வழித்தடம், கடல் பாதைகளைப் பாதுகாக்கும் திறமை, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளோடு, பசுமைத் தொழில்நுட்பங்களுடன் இந்த கப்பல்கள் கட்டப்பட உள்ளன. எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இயற்கைத் தாக்கங்களைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த கப்பல், இந்தியக் கடற்படையில் முதன்முறையாக இணைய உள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

Khukri மற்றும் Kora வகைகளில் 6 போர்க்கப்பல்கள், Kamorta வகையில் 4 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் என ஏற்கனவே பல்வேறு போர்க்கப்பல்களை வெற்றிகரமாகத் தயாரித்து வழங்கியிருப்பது GRSE நிறுவனத்தின் முக்கிய சாதனைகளாகப் பார்க்கப்படுகிறது. மேலும் 8 ASW Shallow Water Craft கப்பல்கள், கடற்படைக்கு 2 ஆய்வுக் கப்பல்கள், என பல்வேறு கப்பல்கள் தயாரிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் GRSE நிறுவனம் NSG-30mm எனப்படும் புதிய தானியங்கி தாக்குதல் கருவியை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இது 30மிமீ அளவில் உள்ள fully automated Naval Gun ஆகும். இந்த ஆயுதம், ASW Shallow Water Craft கப்பல்களில், அதாவது நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து தாக்குதல் நடத்தும் கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தாக்குதல் திறன் என்பது real-time data வழியாக இலக்கை அடையும் வல்லமை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நவீன பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகத் தன்னை உயர்த்திக் கொள்வதோடு, இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கும் GRSE நிறுவனம் உறுதுணையாக அமைந்துள்ளது.

நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய பல்துறைத் திறன்கள் (multi-domain capabilities), சுற்றுச்சூழல் பொறுப்புடன் கூடிய பாதுகாப்பு சாதனங்கள், தற்காலிக மற்றும் எதிர்கால தேவைகளை நிவர்த்தி செய்யும் இதுபோன்ற நவீன போர்க் கப்பல்கள் இந்தியக் கடற்படையின் எதிர்காலத் திட்டங்களுக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதோடு, பாதுகாப்புத்துறையின் உள்நாட்டு உற்பத்திக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author