திமுகவின் இந்து விரோத போக்கு இன்றைய இளைய தலைமுறைக்கு புரியத் தொடங்கியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் பயணம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம் என்று காளிதாசர் பாராட்டிய புகழுடையது. 2500 ஆண்டுகளுக்கு முன் பேரரசர் தொண்டைமான் இளந்திரையன், ஆண்ட தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியதாக, சங்க நூலான “பத்துப்பாட்டு” நூலில் குறிப்பு உள்ளது. கல்வியில் சிறந்த காஞ்சி என்பது சான்றோர்களின் வாக்கு. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங், காஞ்சிபுரம் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் பட்டு என்பது உலகப் புகழ் பெற்றது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த காஞ்சிபுரம் நகரத்தில் உள்ளார்கள். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய்க்கு பட்டு தொடர்பான வர்த்தகம் நடைபெறுகிறது. சமீபத்தில், G20 மாநாட்டின் போது, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ,ஜப்பான் பிரதமருக்கு காஞ்சிபுரம் பட்டு சால்வையை பரிசாக வழங்கினார்.
காசி நகர் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி நம் பாரதப் பிரதமர் மோடி பெருமைப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அயோத்தி ஸ்ரீராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வை நேரலையில் பார்க்க, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் காஞ்சிபுரம் வந்தபோது, திட்டமிட்டு திமுக அரசு அந்த நிகழ்ச்சிக்கு உண்டான அனுமதியை ரத்து செய்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ராமர் கோவில் பிராணப்பிரதிஷ்டை நிகழ்ச்சி நேரலை நிகழ்வை ஒளிபரப்ப தடை செய்யப்பட்டது.
பின்னர் பாரதிய ஜனதா கட்சி நீதிமன்றத்தை நாடியதன் மூலமே அந்த தடை நீக்கப்பட்டு, ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டையை மக்கள் பக்தியோடு கண்டு களித்தனர். அன்று என்ன சட்ட ஒழுங்கு சீர்கேடு நடந்துவிட்டது என்று முக ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும். இனியும் திமுக மக்களை ஏமாற்ற முடியாது. திமுகவின் இந்து விரோத போக்கு இன்றைய இளைய தலைமுறைக்கும் புரியத் தொடங்கியுள்ளது.
கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பிலும், செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் கோவிலுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலும் திருப்பணிகள் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிய போகிறது இதுவரை திருப்பணிக்கான எந்த தடயமும் இல்லை.
கோவில் சொத்தை வைத்து வயிற்றை வளர்க்கும் திமுக, கோவில் பணத்தில் திருப்பணிகள் செய்வதற்கு எதற்கு சுணக்கம் காட்டுகிறது. கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே இருக்கும் இந்த அறமற்ற அறநிலையத் துறை பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் கலைக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.