சீனாவின் சாங் ஏ -6 திட்டக்குழு, 2025ம் ஆண்டின் குழு பிரிவிலான உலக விண்வெளி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதாக சர்வதேச விண்வெளிப் பயணக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சந்திர ஆய்வுத் திட்டத்தில் மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய சீன ஆராய்ச்சியாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த விருது, இவ்வாண்டின் பிற்பாதியில் சிட்னி நகரில் நடைபெறும் சர்வதேச விண்வெளி மாநாட்டில் சீனாவுக்கு வழங்கப்படும் என்று சர்வதேச விண்வெளிப் பயணக் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டியன் ஃபீச்சிங்கர் தெரிவித்தார்.
சாங் ஏ-6 விண்கலத்தை கடந்த ஆண்டு மே 3ம் நாள் சீனா விண்ணில் செலுத்தியது. நிலவின் மர்மம் நிறைந்த மறுபக்கத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்து புவிக்குத் கொண்டு வருவது இத்திட்டத்தின் நோக்கமாகும். அனைத்து ஆய்வுப் பணிகளையும் நிறைவேற்றிய பின்னர், 1935.3 கிராம் அளவிலான சந்திர மாதிரிகளுடன் கடந்த ஜூன் 25ம் நாள் சாங் ஏ-6 விண்கலம் வெற்றிகரமாக புவிக்குத் திரும்பியது.
விண்வெளி ஆய்வில் சீனாவின் சாதனைகளையும், இத்துறையில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனா வழங்கிய வாய்ப்பையும் கிறிஸ்டியன் ஃபீச்சிங்கர் பாராட்டினார். கடந்த ஆண்டு மிலான் நகரில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில் இந்த சந்திர மாதிரிகளை கண்டு மகிழ்ந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.