இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்றும், மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரம் ஏழு நிமிடங்களாகக் குறையும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
பாவ்நகர் டெர்மினஸில் அயோத்தி எக்ஸ்பிரஸ், ரேவா-புனே எக்ஸ்பிரஸ் மற்றும் ஜபல்பூர்-ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களை காணொலி வழியாக தொடங்கி வைத்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை மும்பை – அகமதாபாத் இடையே விரைவில் தொடங்கப்படும்.
மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான முதல் புல்லட் ரயில் மிக விரைவில் தொடங்கும், மேலும் இந்தத் திட்டத்திற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இது ஓடத் தொடங்கும் போது, மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான பயணம் இரண்டு மணி நேரம் ஏழு நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
இந்த ரயில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் இருந்து தொடங்கி குஜராத்தில் உள்ள வாபி, சூரத் , ஆனந்த், வதோதரா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களை இணைக்கும் 508 கி.மீ தூரத்தை கடக்கும்.
இது மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும். விரைவில் ஜப்பானில் இருந்து சரக்கு கப்பல் மூலம் புல்லட் ரயில்கள் கொண்டு வரப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும், புல்லட் ரயில்களின் இயக்கம், பராமரிப்பு தொடர்பாக அறிந்து கொள்ள இந்திய குழு ஜப்பானில் முகாமிட்டுள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்கள் தற்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.