ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

Estimated read time 1 min read

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அதிக வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கையை “நியாயமற்றது மற்றும் காரணமற்றது” என்று இந்தியா கண்டித்துள்ளது. ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு இணங்கி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு இந்தியப் பொருளுக்கும் 25 சதவீத வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்தால், இந்த வரிக்கு மேல் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதால்,இந்தியா மறைமுகமாக உக்ரைன் போரைத் தொடர ரஷ்யாவுக்கு உதவுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குரலாகவே வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் வெள்ளை மாளிகை துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர் உள்ளிட்ட ட்ரம்பின் அதிகாரிகளும் ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்குவது தவறு என்று தெரிவித்திருந்தனர்.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், நாட்டின் ஆற்றல் தேவைகளைப் பொறுத்து, எல்லா நிலைமைகளையும் பரிசீலித்து இந்தியா முடிவெடுக்கிறது என்றும், சந்தையில் என்ன கிடைக்கிறது, உலகளவில் என்ன நிலைமை உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்வதாகக் கூறியிருந்தார்.

இந்தியாவை விமர்சிக்கும் நாடுகளே ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்பதையும் இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, ரஷ்யாவுடன், 67.5 பில்லியன் யூரோவுக்கு இருதரப்பு வர்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றியம் செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 7 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்தாண்டு, ஐரோப்பிய LNG இறக்குமதிகள், 16.5 மில்லியன் டன்களை எட்டின. இது 2022 இல் 15.21 மில்லியன் டன்களாக இருந்த கடைசி சாதனையை விட அதிகமாகும். எண்ணெய் மட்டுமின்றி, உரங்கள், சுரங்கப் பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் என ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்துள்ளது.

அமெரிக்கா, தனது அணுசக்தித் தொழிலுக்குத் தேவையான யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, மின்சார தேவைக்கு பல்லேடியம்,உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை ரஷ்யாவிடமிருந்தே தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா உலகின் மொத்த எண்ணெய் நுகர்வில் வெறும் 2 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த ஆண்டு இதுவரை இந்தியா சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 1.7 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்கி வருவதாகக் கூறப் படுகிறது.

ரஷ்யாவின் வருவாயைக் குறைக்க உதவியது மட்டுமல்லாமல், உலகளாவிய எண்ணெய் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க இந்தியாவின் நடவடிக்கை உதவியது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, ரஷ்யா மீதான மேற்கத்தியப் பொருளாதாரத் தடைகள், விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்த பின் உலகளாவிய எண்ணெய் சந்தையைக் காப்பாற்றவே, இந்தியா ரஷ்ய எண்ணெய் கொள்முதலை அதிகரித்ததற்கான முக்கிய காரணமாகும்.

ஏற்கெனவே ,இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி, ரஷ்ய எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வதைப் பாராட்டி இருந்தார். யாராவது ரஷ்ய எண்ணெய்யை ஒரு விலை வரம்பில் வாங்க வேண்டும் என்று அமெரிக்க விரும்பியது போலவே இந்தியா வாங்கியது என்றும், அது மீறல் அல்ல என்றும், கொள்கையின் தேர்ந்த முடிவு என்றும் கூறியிருந்தார்.

மேலும், எண்ணெய் விலைகள் உயர்வதை அமெரிக்கா விரும்பவில்லை, எனவே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்தது உலகளாவிய நன்மை என்று கூறியிருந்தார். வர்த்தகப் போரில்,இந்தியா தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் நிலையில், ட்ரம்ப் தனது கோரிக்கையைக் கைவிடுவாரா என்பது போகத் போக தெரியும்.

Please follow and like us:

You May Also Like

More From Author