தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நீண்ட தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் வழக்கம்போல் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராட சென்றனர். அந்த நேரத்தில் திடீரென ராட்சத அலை ஒன்று எழுந்து, கடலில் குளித்துக் கொண்டிருந்த பலரை உள்ளே இழுத்துச் சென்றது.
சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்க, கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக நீரில் பாய்ந்து அனைவரையும் மீட்டனர். இதில் சிலர் தப்பியோடும்போது இடறி விழுந்ததால் பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காலில் முறிவு, காயங்களுக்கு ஆளானனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திடீரென எழுந்த ராட்சத அலை காரணமாக பக்தர்கள் காயமடைந்த சம்பவம், திருச்செந்தூர் பகுதியிலும், பக்தர்களிடையிலும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.