சீனா : சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்யை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தப் பேச்சுவாா்த்தையில், கிழக்கு லடாக் எல்லை மோதலைத் தொடா்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னையில் சுமுக முடிவு காண இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு, இந்தியா-சீன உறவுகளை மேம்படுத்துவதற்கும், பொருளாதாரம், முதலீடு, செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களைப் பற்றி விவாதிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் மோடி சந்திக்க உள்ளார்.
முன்னதாக, 2024 அக்டோபர் 23 அன்று ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து 50 நிமிடங்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பில் எல்லை விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் உலகளாவிய அமைதி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா-சீன உறவுகள் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் முன்னேற வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.