சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதில் சிக்கி, 1000 பேர் பலியாகி இருக்கின்றனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். இந்த தகவலை சூடான் விடுதலை இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐநா சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிராமமே முற்றிலும் தரைமட்டமாகி விட்டதாக சூடான் விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்தி வரும் அப்டேல்வாஹித் முகமது நூர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது;
நிலச்சரிவில் கிராமமும், அங்குள்ள வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. ஏராளமான பெண்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கிராமமே முற்றிலும் அழிந்துவிட்டது.
இவ்வாறு அப்டேல்வாஹித் முகமது நூர் கூறி உள்ளார்.